போடிமெட்டு மலைப்பாதையில், 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி - 20 பேர் படுகாயம்
போடிமெட்டு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்ததில் பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
போடி,
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கேரள மாநிலத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்லும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் போடி, பண்ணைத்தோப்பு, தோப்புப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 21 பெண்களை ஏலக்காய் தோட்ட வேலைக்கு கண்ணன் ஒரு ஜீப்பில் அழைத்து சென்றார். கேரள மாநிலம் பி.எல்.ராவ் என்னுமிடத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் அவர்கள் வேலை செய்தனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து நேற்று மதியம் 3 மணி அளவில் தங்கள் ஊருக்கு ஒரே ஜீப்பில் புறப்பட்டனர்.
ஜீப்பை பி.எல்.ராவ் பகுதியை சேர்ந்த முகேஷ்ராஜன் (25) என்பவர் ஓட்டினார். அந்த ஜீப்பில் கண்ணன், டிரைவர் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். போடிமெட்டு மலைப்பாதையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து ஜீப் வந்து கொண்டிருந்தது.
பிஸ்கட் பாறை என்னுமிடத்தில் வந்தபோது ஜீப்பின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பாதையில் தாறுமாறாக ஓடி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
ஜீப்பில் இருந்த பெண் தொழிலாளர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் விடுத்தனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் ஜீப் உருண்டு கீழ்பகுதியில் உள்ள சாலையில் வந்து விழுந்தது. ஜீப்பில் பயணம் செய்த கண்ணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் முகேஷ்ராஜன், பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னத்தாய் (22), பரமேஸ்வரி (24), ராணி (42), தமிழ்ச்செல்வி (30), உமா (26), பாப்பா (59), தனலட்சுமி (42), போதுமணி (48), முந்தல் கிராமத்தை சேர்ந்த அன்னக்கிளி (68) உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். போடி அரசு மருத்துவமனையில் இருந்து அன்னக்கிளி உள்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்னக்கிளி இறந்தார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story