கோவை காந்திபுரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை 5 ஏக்கரில் அமைக்கப்படுகிறது
கோவை காந்திபுரத்தில் புதிதாக திறந்த வெளி சிறைச்சாலை 5 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.
கோவை,
கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம் எதிரே மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதன் அருகே உள்ள பெண்கள் சிறையில், 40-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கோவையில் மத்திய சிறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர சிங்காநல்லூர் பகுதியில் திறந்தவெளி சிறை மற்றும் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் சிறார் சிறைச்சாலை உள்ளது.சிங்காநல்லூரில் உள்ளது போல் கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்திலும் சிறிய அளவிலான திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை புழல், கோவை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 8 மத்திய சிறை வளாகத்தில் புதிதாக சிறிய அளவிலான திறந்தவெளி சிறை அமைக்க அரசு ஆணை வெளியிட்டது. கோவையில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையின் பின்புறம் விவசாய நிலம் உள்ளது. இங்கு 5 ஏக்கர் பரப்பளவில் சிறிய அள விலான திறந்தவெளி சிறைச்சாைல அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.திறந்தவெளி சிறையில் விவசாய நிலம் இருக்க வேண்டும். அதில் கத்திரி, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற குறுகிய கால காய்கறிகள் சாகுபடி செய்வதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
விவசாய நிலத்தில் பணியாற்ற அரசு ஆணைப்படி 100 கைதிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆனால் முதல் கட்டமாக 20 தண்டனை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாய பணி மேற்கொள்ளப்படும். திறந்தவெளிசிறையில் பணியில் ஈடுபடுத்தப்படும் கைதிகளின் தண்டனை காலம் சரிபாதியாக குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story