அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்


அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:15 AM IST (Updated: 17 Sept 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலர்களுக்கான வரைவு கையேட்டினை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்டார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா மேலாண்மை நிலையத்தில் புதிய நடைமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பயிற்சி பாடல்(பண்) மற்றும் அரசு அலுவலர்களுக்கான வரைவு கையேடு வெளியிடும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் வெ.இறையன்பு தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குனர் ஷோபா, இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு பயிற்சி பாடல் மற்றும் வரைவு கையேட்டினை வெளியிட்டார். மேலும் அண்ணா மேலாண்மை நிலைய அரங்கின் முகப்பில் மெருகேற்றப்பட்ட அண்ணாவின் வண்ண ஓவியத்தையும் திறந்து வைத்தார்.

அரசு அலுவலகங்களில் முதல் முறையாக பணியாளர்களின் செயல்களை பாராட்டி கருத்துகளை பதிவிடும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் ‘பாராட்டு சுவர்’ அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் அவர் திறந்து வைத்து, புதிதாக நிறுவப்பட்டுள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், புதிதாக சேரும் அரசு அலுவலர்கள் சரியான முறையில் எவ்வாறு வரைவுகளை எழுத வேண்டும் என்பதற்கு இந்த வரைவு கையேடு உதவும். பணியாளர்கள் செய்கிற நற்பணிகளை ஒருவருக்கொருவர் பாராட்டி மகிழும்போது நிர்வாகம் இணக்கமான சூழலில் செயல்படும் என்று குறிப்பிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான மதன்பாபு, மேலாளர் சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் யுகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story