குன்னம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் 3 பேர் கைது தலைமறைவானவருக்கு வலைவீச்சு


குன்னம் அருகே இரட்டைக்கொலை வழக்கில் 3 பேர் கைது தலைமறைவானவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Sept 2019 3:45 AM IST (Updated: 17 Sept 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குன்னம்,

அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 38). இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் தனது மாமனார் ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் வசித்து வந்தார்.

இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி, அருகே அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகம்(40) என்பவரும் வந்து மது அருந்தி கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த ஆனந்தனுக்கும், சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் கீழே கிடந்த கத்தியை எடுத்து சண்முகத்தை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள் சிலர் ஆனந்தனை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் முருகானந்தம்(36), உறவினர்கள் சின்னதுரை(35), ஆனைமுத்து(53) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சேட்டு(30) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story