அன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


அன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் கடைவீதியில் போலீஸ்பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அன்னவாசல்,

அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் கடைவீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனே அகற்றும்படி ஆக்கிரமிப்பாளர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒலிபெருக்கி மூலமும் மீண்டும், மீண்டும் அறிவிப்பு செய்தனர்.

ஆனால் அதிகாரிகள் வழங்கிய காலக்கெடு முடிவடைந்த பிறகும் கடைவீதி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சில கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

நடவடிக்கை

இதுகுறித்து செயல் அலுவலர் ஆசாராணி கூறுகையில், அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. மேலும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை போல் மற்ற பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story