சென்னையில், போலீஸ் ஏட்டு கைவிரலை கடித்து குதறிய சைக்கோ ஆசாமி கைது - கார்களின் கண்ணாடியையும் உடைத்து ரகளை


சென்னையில், போலீஸ் ஏட்டு கைவிரலை கடித்து குதறிய சைக்கோ ஆசாமி கைது - கார்களின் கண்ணாடியையும் உடைத்து ரகளை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:30 AM IST (Updated: 17 Sept 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவரின் கைவிரலை கடித்து குதறிய சைக்கோ ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகளை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று அடித்து நொறுக்கினார். அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்ணாடி ஜன்னலையும் அந்த நபர் கற்களால் தாக்கி உடைத்தார்.

அந்த மர்ம நபரை, அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளி கோவிந்தராம் மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் காவலாளி மீதும் கற்களை வீசி அந்த மர்ம நபர் தாக்கினார். உடனே இதுகுறித்து காவலாளி கோவிந்தராம் மாம்பலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த மர்ம நபர் சைக்கோ ஆசாமி போல செயல்பட்டார்.

உடனடியாக மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஏட்டு சுந்தரமூர்த்தி ரோந்து ஜீப்பில் சம்பவம் நடந்த தெற்கு போக் சாலைக்கு விரைந்து சென்றார். அங்கு ரகளையில் ஈடுபட்ட சைக்கோ ஆசாமியை ஏட்டு சுந்தரமூர்த்தி மடக்கி பிடித்து இழுத்து சென்றார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஏட்டு சுந்தரமூர்த்தியின் வலதுகை நடுவிரலை கடித்து குதறி விட்டார். கையில் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த ஏட்டு சுந்தரமூர்த்தி, இருந்தாலும் சைக்கோ ஆசாமியை விடாமல், மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். சைக்கோ ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சைக்கோ ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரது பெயர் பல்வாதூர் (வயது 40) என்பதாகும். அவரது மனைவி இறந்து விட்டார். அவர் வேலை தேடி சென்னை வந்ததாக கூறினார். வேலை கிடைக்காமல் விரக்தியாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அவர் சைக்கோ மனநிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது.

காவலாளி கோவிந்தராமிடம் உதவி கேட்க வந்ததாக சைக்கோ நபர் கூறினார். சைக்கோ நபர் கடித்ததால் கைவிரல் சிதைந்து காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சுந்தரமூர்த்தி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காயம் பட்ட கைவிரலில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு தியாகராயநகர் தெற்கு போக் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story