பணத்தகராறில், விவசாயி காரில் கடத்தல்; 2 பேர் கைது, கணவன்-மனைவி உள்பட 8 பேருக்கு வலைவீச்சு


பணத்தகராறில், விவசாயி காரில் கடத்தல்; 2 பேர் கைது, கணவன்-மனைவி உள்பட 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 7:51 PM GMT)

கோட்டூர் அருகே பணத்தகராறில், விவசாயியை காரில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கணவன்-மனைவி உள்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் முல்லை நகரில் வசித்து வருபவர் குகன். இவருடைய மனைவி கோமதி. இவர்கள் இருவரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பியிடம்(வயது 35), திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.

பணம் கொடுத்து 9 மாதங்கள் ஆகியும் தனக்கு வேலை கிடைக்காததால் வேதனை அடைந்த ஆசைத்தம்பி, தனது பணத்தை திருப்பி தருமாறு குகனிடம் பலமுறை போனில் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. பலமுறை கேட்டும் தனக்கு பணம் கிடைக்காததால் நேற்று முன்தினம் நேரில் சென்று குகனிடம் தனது பணத்தை திருப்பி தருமாறு ஆசைத்தம்பி கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஆசைத்தம்பியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தானில் வசிக்கும் தனது மாமாவும், விவசாயியுமான ஜோதிபாசு(45) என்பவரிடம் ஆசைத்தம்பி கூறி உள்ளார். உடனே ஜோதிபாசு, இது தொடர்பாக குகனிடம் போனில் பேசி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெருக வாழ்ந்தானில் உள்ள ஜோதிபாசு வீட்டுக்கு இரண்டு கார்கள் வந்தது. அந்த காரில் இருந்தவர்கள், போலீசார் போல் பேசி வீட்டில் இருந்த ஜோதிபாசுவை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். ஜோதிபாசு போட்ட சத்தம் கேட்டு உறவினர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார், இந்த தகவலை தலையாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள் உஷாராகி விவசாயியை கடத்தி வந்த கார்களை மடக்கி பிடிப்பதற்காக காத்து இருந்தனர். இந்த நிலையில் போலீசார் தங்களை பிடிப்பதற்காக காத்து இருப்பதை தெரிந்து கொண்ட அந்த கும்பல், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மெயின் ரோடு வழியாக செல்லாமல் குறுக்கு வழியில் தலையாமங்கலம் கிராமத்திற்குள் சென்று விட்டனர். அதற்கு மேல் வழி தெரியாததால் கார்களை அங்கேயே நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்ததுடன், காருக்குள் இருந்த ஜோதிபாசுவையும் மீட்டனர். பின்னர் கார்களை ஓட்டி வந்த டிரைவர்கள் இரண்டு பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள், திருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்த அன்பு செல்வன்(45), குட்டி என்கிற ரவிச்சந்தின்(23) என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஜோதிபாசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் அன்புச்செல்வன், ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குகன் மற்றும் அவருடைய மனைவி கோமதி உள்பட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story