சேலத்தில், நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை - கடன் தொல்லையால் விபரீதம்


சேலத்தில், நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை - கடன் தொல்லையால் விபரீதம்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 7:52 PM GMT)

சேலத்தில் கடன் தொல்லையால் நகைக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம்,

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48). நகைக்கடை அதிபர். இவருக்கு திருமணம் ஆகி தென்றல் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர், ஐ.என்.டி.யு.சி.யின் இணை செயலாளராகவும், காங்கிரஸ் பிரமுகராகவும் இருந்து வந்தார். இவருக்கும், அவரது தம்பிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் நாகராஜன் தம்பியை விட்டு பிரிந்து குடும்பத்துடன் செவ்வாய்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை நாகராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

நாகராஜனும், அவரது நண்பரும் சேர்ந்து அம்மாபேட்டையில் ஒரு நகைக்கடையை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் நண்பரிடம் இருந்து விலகி மற்றொரு நண்பரான திருச்சியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் சேர்ந்து அம்மாபேட்டையில் புதிதாக ஒரு நகைக்கடையை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நகைக்கடையில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த கடையை தனது நண்பர் கனகராஜிடமே கொடுத்துவிட்டு, நாகராஜன் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென நகைக்கடையை மூடிவிட்டு கனகராஜ் சென்றுவிட்டார். இதனால் நகை சீட்டு பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளனர். இதன் காரணமாகவும், கடன் தொல்லையாலும் மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜன் திடீரென தூக்குப்போட்டு விபரீத முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story