இளம்பிள்ளை ஏரிக்கரை உடைப்பு: சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


இளம்பிள்ளை ஏரிக்கரை உடைப்பு: சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 7:52 PM GMT)

இளம்பிள்ளையில் ஏரியின் கரை உடைந்ததால் அதன் சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இளம்பிள்ளை, 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள ஏரி நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டது. மேலும், ஏரி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக நடுவனேரிக்கு மழைநீர் செல்லும் வழியில் பெருமாகவுண்டம்பட்டியில் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாலும், கால்வாய்களை தூர்வாரப்படாத காரணத்தினாலும் மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தநிலையில், இளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் ஏரியின் கரையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக்கு பின் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இளம்பிள்ளை ஏரியில் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பில் ஏரியை தூய்மைப்படுத்தி அங்குள்ள கழிவுகளால் பயோ கியாஸ் மூலம் மின்சாரம் எடுக்கவும், தண்ணீரை தூய்மைப்படுத்தவும் திட்டம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் அவரவர் வீடுகளில் தனி கழிப்பிட வசதி உள்ளதால் இந்த ஏரியில் 60 சதவீதமாக இருந்த கழிவுகளின் வீரியம் தற்போது 20 சதவீதமாக உள்ளதால் அதில் மின்சாரம் எடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தூய்மைப்படுத்தி ஏரியில் தண்ணீரை விட வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து இளம்பிள்ளையில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) எம்.முருகன், சேலம் உதவி கலெக்டர் மாறன், சேலம் தெற்கு தாசில்தார் ஆர்த்தி, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story