பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு


பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 17 Sept 2019 3:00 AM IST (Updated: 17 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.

வள்ளியூர்,

கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம் கால்வாய்க்கு நீரேற்றும் திட்டத்தின் மூலம் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த சட்டமன்ற மானிய நிதிநிலை அறிக்கை கூட்டத்தின்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தார். இந்த திட்டம் ரூ.160 கோடி மதிப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான வரைவு திட்டம் தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வறண்ட ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு, பழையாற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் பம்ப் செய்து ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டு வரும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியதற்காக தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்துக்கான வரைவு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். தமிழகத்தில் முதல்முறையாக மின்மோட்டார் மூலம் பம்ப் செய்து பாசனத்துக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது இதுவே ஆகும்.

இந்த திட்டத்தின்படி கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் தென்பகுதியில் பழையாற்றில் கடைசி அணைக்கட்டான மிஷன் அணைக்கட்டு கீழ்பகுதியில் உறை கிணறு அமைக்கப்படுகிறது. இந்த கிணற்றில் இருந்து 3 மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பாறை என்ற இடத்தில் உள்ள ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டு வரப்படுகிறது. ஆண்டில் 105 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் 645 மில்லியன் கனஅடி தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு பம்ப் செய்யப்படும். அங்கிருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள 52 குளங்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேஸ்வரபுரம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள சுமார் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை வரைவு திட்ட செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற்பொறியாளர் அர்ஜூனன், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story