இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி


இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 8:22 PM GMT)

இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த முதியவர் ஒருவர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர், தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்து மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஓடிவந்து அவரை மடக்கிப்பிடித்தனர். தீக்குளிக்க விடாமல் அவரை தடுத்தனர். மேலும் உடனடியாக வாளியில் தயார் நிலையில் வைத்திருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றினர். மேலும் தீயணைப்பு வாகனத்தில் இருந்தும் குழாய் மூலமாக அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பின்னர் அவரை போலீசார் விசாரணைக்காக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் அவர், நெல்லை அருகே உள்ள ரஸ்தா பகுதியை சேர்ந்த விவசாயி போதர் (வயது 56) என்பது தெரியவந்தது. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்சினைக்குரிய இடத்தில் வேறு நபர்கள் வீடு கட்டும் பணியை தொடங்கி விட்டனர். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இந்த தகவல் கலெக்டர் ஷில்பாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story