உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் வழக்கு: வியாபாரிகளை சந்தித்தப்பின் டிராபிக் ராமசாமி தகவல்
“உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் வழக்கு தொடர்வேன்“ என்று வியாபாரிகளை சந்தித்தப்பின் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை டவுனில் சுபாஸ் சந்திரபோஸ் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10 கோடியே 97 லட்சம் திட்ட மதிப்பில் சுபாஸ் சந்திரபோஸ் மாக்கெட்டில் புதிய கடைகள் நெல்லை மாநகராட்சி மூலம் கட்டப்பட உள்ளது.
இதற்காக அங்குள்ள கடைகளை கடந்த 15-ந் தேதிக்குள் (நேற்று முன்தினம்) அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும், புதிய கடைகளை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும், கடைகளை காலி செய்ய அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகளை அடைத்து உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநகராட்சி காலக்கெடு முடிந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று நெல்லை வந்தார். பின்னர் அவர் நெல்லை டவுன் சுபாஸ் சந்திரபோஸ் மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் வியாபாரிகள் மத்தியில் பேசியதாவது:-
மக்கள் மத்தியில் மாற்றமும் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. பயமின்மை, தைரியம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர் என யாராக இருந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. நெல்லை மார்க்கெட் வியாபாரிகள் அறவழியில் போராடி வருகிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் கடைகளை இடிக்க கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். உள்ளாட்சி அமைப்பு இல்லாமல் இதுபோன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்த தனி அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது.
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி விட்டு, அதன் பிறகு கூடும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டிராபிக் ராமசாமி, வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story