கடந்த 3 மாதங்களில் 18 கொலை வழக்குகள் பதிவு; 60 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் நடந்த 18 கொலை வழக்குகளில் 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 6 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவரை தேடி வருகிறோம். புதுக்கோட்டையில் நடந்த லாரி டிரைவர் சொரிமுத்து கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார். கடந்த 12-ந் தேதி முறப்பநாட்டில் நடந்த இசக்கிபாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த மாதம்(ஆகஸ்ட்) 4 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர். இந்த மாதம்(செப்டம்பர்) இதுவரை 3 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உள்ளன. இதில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார்.
நடப்பு ஆண்டில் கொலை வழக்குகள் குறைந்து உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 76 வழக்குகளும், 2016-ம் ஆண்டு 64 வழக்குகளும், 2017-ம் ஆண்டு 67 வழக்குகளும், 2018-ம் ஆண்டு 60 வழக்குகளும், நடப்பு ஆண்டில் இதுவரை 54 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் மாவட்டம் முழுவதும் 35 திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 20 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 230 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில பதிவான 40 வழக்குகளில் 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்ததாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் 47 வழக்குகளில் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 119 வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் அர்ப்பணிப்புடன் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 200 ரோந்து குழுவும், 70 மோட்டார் சைக்கிள் ரோந்தும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களை இணைத்து வாட்ஸ்அப் குரூப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் முன்கூட்டியே தகவல்களை பெற்று சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். மேலும் தண்டனை பெற்றுக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் ஏதேனும் சம்பங்கள் நடந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் மாநில அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏதேனும் சிறிய சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காவலன் செயலியிலும் தகவல்களை தெரிவிக்கலாம். இதுவரை ஹெல்மெட் அணியாத சுமார் 1 லட்சம் பேர் மீதும், சீட்பெல்ட் அணியாத 25 ஆயிரம் பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6 ஆயிரம் பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் செல்போன் திருட்டு வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 75 வழக்குகளில் செல்போனை மீட்டனர். அந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story