பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு டிரைவர் திடீர் சாவு - உடலை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை
பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காட்டை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் திடீரென மூச்சுத்திணறி இறந்தார். அவரது உடலை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு ஜவஹர் வீதியை சேர்ந்தவர் பகவதியப்பன் என்ற அய்யப்பன் (வயது 52). இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ம் தேதி நண்பர்கள் சிலருடன் இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டார். ரெயில் மூலம் கடந்த 14-ந் தேதி அவர்கள் பத்ரிநாத் சென்றடைந்தனர்.
அன்று இரவில் பத்ரிநாத் கோவிலுக்கு செல்வதற்காக மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது அய்யப்பனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தானா போலீசார் விசாரணை நடத்தி, அவரது உடலை கைப்பற்றி ஜோதிமாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி களக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
அய்யப்பனுக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவியும், நம்பிராஜன் (20) என்ற மகனும், பொன்மாரி (17) என்ற மகளும் உள்ளனர். நம்பிராஜன் டிப்ளமோ படித்துள்ளார். பொன்மாரி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் அய்யப்பன் உடலை கொண்டு வருவதற்கு பணம் இன்றி அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். எனவே, அவரது உடலை சொந்த ஊரான களக்காட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story