நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: கலெக்டர் ஷில்பா பேச்சு
நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா பேசினார்.
நெல்லை,
மத்திய அரசு மூலம் ஜல்சக்தி அபியான் என்ற நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் ஓர் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா மற்றும் நீர் மேலாண்மை திட்டம் குறித்த கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜல்சக்தி அபியான் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் நீர் மேலாண்மை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களிடமும் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது நெல்லை மாவட்டத்தில் பல கிராம பஞ்சாயத்துகளில் ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பலன்கள் விரைவில் தெரியவரும். குடிமராமத்து, குளங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்ட நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலக்குழு மூலம் எளிதாகவும், விரைவாகவும் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இந்த பணிகளுக்கு விவசாயிகளும், பொது மக்களுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக பின்பற்றி நெல்லை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும். நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.
கருத்தரங்கத்தில் சமூக பங்களிப்பு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் நீர் மேலாண்மை பணிகளை ஒருங்கிணைப்பு செய்து வரும் கூடு அறக்கட்டளை, நாம் தாமிரபரணி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
கருத்தரங்கத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, ஜல்சக்தி அபியான் திட்ட பார்வையாளர்கள் சாந்தனு மித்ரா, பிங்கா மேத்யூ, சுனிதா தத்வா, சின்ஹா, பன்னீர், சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி பணிகளின் ஒருங்கிணைப்பாளர் சக்திநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், வங்கி அதிகாரிகள், தொழில் அதிபரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story