மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு: சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை


மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு: சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி இறந்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி குளக்கரை தெருவை சேர்ந்தவர் மணி (வயது 47), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த மண்ணு ரெட்டியார் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7.2.2014 அன்று அதிகாலை 4 மணிக்கு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மணி சென்றார். அப்போது பக்கத்து நிலத்தில் மோட்டூரை சேர்ந்த ஜெயக்குமார்(35), ராஜேந்திரன்(47) ஆகிய இருவரும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற நிலத்து வரப்பில் கம்பிகளை கட்டி வைத்து, அதில் மின் இணைப்பு கொடுத்து வைத்திருந்தனர். இதனை கவனிக்காத மணி, அந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக இறந்தார்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து மணியின் மனைவி உண்ணாமலை, சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், ராஜேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி எழில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து ஒருவரின் இறப்புக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக ஜெயக்குமார், ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இருவரும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக் குமார், ராஜேந்திரன் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story