ஒடிசாவில் மதுரை என்ஜினீயர் அடித்து கொலை; போலீஸ் கமிஷனரிடம், தந்தை புகார்


ஒடிசாவில் மதுரை என்ஜினீயர் அடித்து கொலை; போலீஸ் கமிஷனரிடம், தந்தை புகார்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் உள்ள அரசு இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றிய மதுரை என்ஜினீயர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை அய்யர்பங்களா பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் கணேஷ்குமார் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு ஒடிசாவில் உள்ள மத்திய அரசின் இரும்பு தொழிற்சாலையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் அங்கு பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு வரச்சொன்னார். அங்கு பணி ஒதுக்கீடு தொடர்பாக கணேஷ்குமாருக்கும், பணியாளர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பணியாளர், இரும்பு கம்பியால் கணேஷ்குமாரின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் மதுரையில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு நேற்று காலை தெரியவந்தது. உடனே அவரது உறவினர்கள் ஒடிசாவிற்கு விரைந்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து கணேஷ்குமாரின் தந்தை கூறும்போது, தனது மகன் மீது நடத்திய தாக்குதல் குறித்தும், அவனின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை தொழிற்சாலை நிர்வாகமும், அங்குள்ள அரசும் எங்களுக்கு எவ்வித முறையான தகவலும் தெரிவிக்கவில்லை. எனது மகன் இறந்துவிட்டான் என்பது குறித்து கூட தெரிவிக்கவில்லை என்றார்.

பின்னர் அவர், மகனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

Next Story