ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி


ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி
x
தினத்தந்தி 17 Sept 2019 4:45 AM IST (Updated: 17 Sept 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி ஆஜர் ஆனார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியர்களான முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். 3 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை நீதிபதி பரிமளா விசாரித்து, 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கமாக நிர்மலாதேவி காரில் கோர்ட்டுக்கு வருவார். ஆனால் அவர் நேற்று கோர்ட்டில் ஆஜராவதற்கு அருப்புக்கோட்டையில் இருந்து ஸ்கூட்டரை ஓட்டி தனியாக வந்திருந்தார்.

தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த அவர், வாகனத்தை மர நிழலில் நிறுத்தி விட்டு கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார்.

நிர்மலாதேவி சார்பில் ஆஜரான வக்கீல் பசும்பொன் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கிய பிரமுகர் ஒருவர் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை முடியாது. ஜாமீனில் வெளியே இருக்கும் நிர்மலாதேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் இருக்கிறது. சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி, தற்போது உரிய சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருக்கிறார்.

ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் வருகிற 27-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story