ஈரான் கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவரை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு


ஈரான் கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவரை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:30 PM GMT (Updated: 16 Sep 2019 9:45 PM GMT)

துபாயில் மீன்பிடிக்க சென்று ஈரான் கடற் படையால் சிறை வைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவரை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் சந்திரகுமார் என்ற மீனவர் கடந்த மே 29-ந்தேதி துபாயில் மீன்பிடி ஒப்பந்தக்கூலியாக சென்றுள்ளார். ஜூலை 27-ந்தேதி துபாயில் மீனராகித் என்ற இடத்தில் இருந்து முகமது சையத் என்பவருக்கு சொந்தமான படகில் சந்திரகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 5 பேர், குஜராத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து கிஸ் தீவில் படகுடன் சிறை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட சந்திரகுமாரின் குடும்பத்தினர் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் திரளாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் கடந்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையான மீனவர்களின் குடும்பத்திற்கு சிறையில் இருந்த காலத்தை கணக்கிட்டு அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்கப்படுவது வழக் கம். அந்த நிதி இதுவரை எந்த மீனவர்களுக்கும் வழங் கப்படவில்லை. இந்த தொகையை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story