சேலத்தில், தூய்மையை பராமரிக்காத 2 தனியார் வாகன நிறுத்தங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சேலத்தில் தூய்மையை பராமரிக்காத 2 தனியார் வாகன நிறுத்தங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் சதீஷ் நடவடிக்கை எடுத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள் என 2,840 களப்பணியாளர்கள் தீவிர தொற்றுநோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து வார்டுகளில் 1,000 களப்பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் தீவிர துப்புரவு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் அம்மாபேட்டை வள்ளிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது லாரிகள் நிறுத்தும் இடத்தில் தூய்மையை பராமரிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் சதீஷ் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அவர் வீராணம் மெயின்ரோடு பகுதியில் உள்ள கார்கள் நிறுத்தும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குடிநீர் தொட்டி தூய்மையாக பராமரிக்கப்படாமலும், டயர்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வீடு,வீடாக சென்று தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். களப்பணியார்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வார்டுகளில் களஆய்வு செய்து, வீடுகளில் தவறாமல் தேதி குறிப்பிட வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பழைய இரும்பு கடைகளில், திறந்தவெளியில் போடப்பட்டுள்ள பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தேவையற்ற டயர்கள், பொருட்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி உரிய படிவத்தில் விவரங்கள் அளிக்க வேண்டும். இவர்களின் பணிகளை கண்காணிக்க 4 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
Related Tags :
Next Story