சூளகிரி அருகே, வெறி நாய் கடித்து 15 பேர் படுகாயம்


சூளகிரி அருகே, வெறி நாய் கடித்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Sep 2019 9:45 PM GMT (Updated: 16 Sep 2019 9:49 PM GMT)

சூளகிரி அருகே வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக வெறி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. மேலும் அந்த நாய், பொதுமக்களை துரத்தியவாறும் இருந்தது. இதனால் மக்கள் சாலையில் நடமாடவே அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வெறிநாய் தெருவில் சென்ற 5 பேரை கடித்து குதறியது.

இதன் தொடர்ச்சியாக, நேற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மா, சுசீலம்மா, நல்லப்பா, பத்மா, பையம்மா உள்பட 15 பேரை அந்த வெறிநாய் துரத்தி, துரத்தி கடித்தது. இதில் 15 பேருக்கும் கை, கால் மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அனைவரும் காமன்தொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அந்த வெறிநாயை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், கால்நடைத்துறையினரும் தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை காமன்தொட்டி அருகே விவசாய நிலங்களில் அந்த நாய் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த இளைஞர்கள் அங்கு சென்று வெறிநாயை அடித்து கொன்று, அப்பகுதியில் புதைத்தனர். வெறிநாய் இறந்ததையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story