வேலூரில் நில வரைபட அனுமதி வழங்க ரூ.2 லட்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது


வேலூரில் நில வரைபட அனுமதி வழங்க ரூ.2 லட்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 9:49 PM GMT)

நில வரைபடம் அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு துணை இயக்குனர், இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வேலூர், 

வேலூர் பெரியார் பூங்கா எதிரே நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வேலூர் உள்ளூர் திட்டக்குழும அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டத்தின் நகராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு கட்டிட வரைபடம் அனுமதி வழங்குவது மற்றும் ரியல் எஸ்டேட் நில வரைபட அனுமதி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் துணை இயக்குனராக ஞானமணி பணியாற்றி வருகிறார். மேலும் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேஷ் என்பவர் அரக்கோணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ஏக்கர் காலிமனை வாங்கினார். அதில், சில ஏக்கரில் ‘பிளாட்’ அமைத்து விற்பனை செய்ய எண்ணிய அவர், அதற்கான நில வரைபடம் அனுமதி வாங்குவது தொடர்பாக வேலூரில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் ஞானமணியை அணுகினார். அப்போது துணை இயக்குனர் அனுமதி வழங்க அதே துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுப்பெற்ற ராஜசேகரன் மூலம் கணேசிடம் ரூ.2 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேஷ், இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை இயக்குனர் ஞானமணி மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்படும் ராஜசேகரன் ஆகியோரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி கணேஷ் ரூ.2 லட்சம் லஞ்சம் தருவதாகவும், அதனை நேற்று கொடுப்பதாகவும் ராஜசேகரனிடம் தெரிவித்தார்.

அதன்படி போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 100-ஐ கணேசிடம் வழங்கினர். அதனை அவர் நேற்று மதியம் 12 மணியளவில் ராஜசேகரன் மூலம் அலுவலகத்தில் இருந்த துணை இயக்குனர் ஞானமணியிடம் கொடுத்தார். இதுகுறித்து கணேஷ் செல்போன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், விஜயலட்சுமி உள்பட 10 பேர் அடங்கிய குழுவினர் அதிரடியாக நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் முதற்கட்டமாக அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே உள்ளவர்கள் உள்ளே வராதபடியும் பார்த்துக் கொண்டனர்.

பின்னர் துணை இயக்குனர் அறைக்குள் நுழைந்த போலீசார் துணை இயக்குனர் ஞானமணியின் மேசை டிராயரில் இருந்த ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மற்ற அதிகாரிகளின் அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக துணை இயக்குனர் ஞானமணி மற்றும் அங்கிருந்த இடைத்தரகர் ராஜசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவு 9 மணி வரை நீடித்தது.

நில வரைபடம் அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story