குடியாத்தத்தில், நூதன முறையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை மோசடி - மர்ம நபருக்கு வலைவீச்சு


குடியாத்தத்தில், நூதன முறையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை மோசடி - மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Sept 2019 3:30 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் நூதன முறையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகைகளை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் நடுப்பேட்டை வீரசிவாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி சுகுணா (வயது 70). இவரது மகன் கர்ணன். குடியாத்தம் செதுக்கரை பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சுகுணாவிடம் 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்து பேச்சு கொடுத்தார். அப்போது சுகுணாவிடம் ஆறுதலாக பேசுவதுபோல் பேச்சு கொடுத்து, உடல்நிலை சீராக மந்திரம் செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் அந்த நபர் வீட்டின் உள்ளே சென்று மந்திரம் செய்ய சொம்பில் தண்ணீர் கொண்டு வர கூறியுள்ளார். தண்ணீர் கொண்டு வந்தவுடன் அந்த சொம்பில் நகைகளை போட கூறினார்.

இதனையடுத்து சுகுணா தன்னிடமிருந்த வளையல்கள், செயின், கம்மல் என 9 பவுன் நகைகளை அதில் போட்டுள்ளார். பின்னர் அந்த நபர் மந்திரம் செய்துள்ளார். அதன்பின்பு சுகுணாவிடம் முகத்தை கழுவிவிட்டு வாருங்கள் என கூறினார். முகத்தை கழுவிவிட்டு அவர் வந்து பார்த்தபோது அந்த நபரை காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் சொம்பில் பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நூதன முறையில் நகைகளை மோசடி செய்த நபர் குறித்து தனது மகன் கர்ணனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்ணன் குடியாத்தம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நூதன முறையில் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story