திருவண்ணாமலையில் ரூ.84 லட்சத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள்


திருவண்ணாமலையில் ரூ.84 லட்சத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:15 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.84 லட்சத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் மொத்தம் 33 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் ஏற்கனவே 100 தள்ளு வண்டிகள் மூலம் வீடு, வீடாகச் சென்று தினமும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் அனைத்து வகையிலும் சராசரியாக 55 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை நகராட்சிக்கு தற்போது தூய்மை பாரத திட்டத்தின் மூலம் முற்றிலும் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ரூ.84 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்தில் 4 பேட்டரிகள் பொருத்தப்பட்டு 3 மக்கும் குப்பை தொட்டி, 3 மக்காத குப்பை தொட்டி என 6 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று 60 பேட்டரி வாகனங்கள் மூலம் ஒரு வாகனத்திற்கு 2 தூய்மை பணியாளர்கள் வீதம் மொத்தம் 120 தூய்மை பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணியாளர்களின் பணிகள் குறைந்தும், நேரமும் சேமிக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று பேட்டரி மூலம் இயங்கும் 60 புதிய வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடந்தது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சங்கர், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story