ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு


ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் வள்ளுவர் 2-வது தெருவை சேர்ந்த பெண்கள் அதிகாலையில் குழாயில் தண்ணீர் பிடிக்க வெளியே வந்தனர். அப்போது அந்த பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டது. உடனே அதே பகுதியை சேர்ந்த ராஜேசுவரி என்பவர் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார்.

அப்போது சாலையின் ஓரத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. உடனே அந்த குழந்தையை தூக்கி அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தார். ஆனால் குழந்தையை அந்த பகுதியில் இருந்தவர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த குழந்தையை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தபோது, அக்குழந்தை பிறந்து சில மணி நேரம் தான் ஆகியுள்ளது என்று தெரிவித்தனர். பின்னர் டாக்டர்கள் குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள சிசு நலப்பிரிவில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பின்னர் இதுதொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையோரம் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்?, தவறான வழியில் பிறந்த குழந்தை என்பதால் அதனை பெற்றெடுத்த தாய் யாருக்கும் தெரியாமல் வீசி சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story