5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்வோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


5, 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்வோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதை மறுபரி சீலனை செய்வோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்காலுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு, எம்மதமும் சம்மதம். அதேபோல, அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இணைப்பு மொழியாக ஆங்கிலமும், மாநில மொழி மற்றும் விரும்பும் மொழியை படிக்கலாம். இதற்கு மாறாக, இந்தியை திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து ஏற்புடையதல்ல. எனவே அவர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்.

புதுச்சேரியில், பேனர்களை வைக்க ஏற்கனவே தடை உள்ளது. ஒரு சில இடங்களில் பேனர்களை வைக்க இடம் ஒதுக்கியுள்ளோம். சென்னையில் பேனர் சரிந்ததில் பெண் என்ஜினீயர் பலியான சம்பவத்துக்கு பிறகு தற்போது அதையும் மறுபரிசீனை செய்யவுள்ளோம். என்னைக்கேட்டால் முழுமையாக பேனர்களை வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இது குறித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கையும் விடப் பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியை பொறுத்தவரை, தமிழக அரசு கொண்டுவந்துள்ள 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதால் இளம் சிறார்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்துபேசி அதை மறுபரிசீலனை செய்யவுள்ளோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக, காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் இயங்கும் அரசுத்துறை அலுவலகங்களுக்கு சென்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காரைக்கால் சேத்திலால்நகர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்ற முதல் அமைச்சர், மாணவர்களுடன் உரையாடி அவர்களின் மதிய உணவை ருசித்து பார்த்தார்.

Next Story