பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி மாநாட்டில் வலியுறுத்தல்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகை எம்.பி.யுமான செல்வராஜ் ஏற்றினார். இதில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், துணை செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட செயலாளர் புண்ணீஸ்வரன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நில வளம், நீர் வளம், மனித வள சீரழிவிற்கு காரணமாக உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும், கடல் மீனவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அனைத்தும், உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கிட வேண்டும். அரசு மதுவிலக்கை அமல்படுத்திட மதுபானக்கடையினை படிப்படியாக குறைத்து அப்பணியாளர்களை அரசு துறைகளில் உள்ள மாற்றுப்பணியில் அமர்த்திட வேண்டும்.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட அபராத தொகை மிக அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசும் புதிய சட்டத்தை அமலாக்க முடியாது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தியுள்ளதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story