ரெயில் நிலையங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது


ரெயில் நிலையங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 Sept 2019 3:45 AM IST (Updated: 17 Sept 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் வழிப் பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை,

ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகேஷின் தந்தை உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் தனது தந்தையை பார்த்து விட்டு, பேசின் பாலம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது ரெயில் நிலையத்தில் 2 மர்ம நபர்கள் மகேஷை, வழிமறித்து செல்போன் பணத்தை கொடுக்கும் படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மகேஷ் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கிய மர்ம நபர்கள், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து மகேஷ் எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சென்டிரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் வேலு உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு வாலிபரை நேற்று பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (31) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் நேற்று எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் (24) மற்றும் மயிலாப்பூர், கபாலீசுவரர் நகர் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (எ) பிரதீப் (23) என்பது தெரியவந்தது.

மேலும் திருட்டு வழக்கில் புழல் சிறையில் இருந்தபோது, 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக பல பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பிரதீப் மீதும், கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணராஜ் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story