ரத்தினபுரியில், வீட்டில் சிறை வைக்கப்பட்ட 3 சிறுமிகள் மீட்பு - பண ஆசை காட்டி அழைத்து வந்தவர் உள்பட 3 வாலிபர்களிடம் விசாரணை


ரத்தினபுரியில், வீட்டில் சிறை வைக்கப்பட்ட 3 சிறுமிகள் மீட்பு - பண ஆசை காட்டி அழைத்து வந்தவர் உள்பட 3 வாலிபர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 Sep 2019 9:30 PM GMT (Updated: 17 Sep 2019 5:21 PM GMT)

ரத்தினபுரியில் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த 3 சிறுமிகளை போலீசார் மீட்டனர். அவர்களை பண ஆசை காட்டி அழைத்து வந்தவர் உள்பட 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை ரத்தினபுரி கருணாநிதி நகர் புதுப்பாளையத்தில் உள்ள பூபதி என்பவரது வீட்டில் 3 சிறுமிகளை நள்ளிரவில் சிறை வைத்து இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டு இருந்த 3 சிறுமிகளை மீட்டனர். சிறுமிகளை அடைத்து வைத்து இருந்த சிவானந்தா காலனியை சேர்ந்த விஜயராகவன்(வயது24), பூபதி(19), குமார்(33) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் சிறுமிகளை பத்திரமாக போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சிறுமிகள் என்று தெரியவந்தது. இதில் ஒரு சிறுமிக்கு 13 வயது, மற்ற 2 சிறுமிகளுக்கு 16 வயது..

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமிகளை விஜயராகவன் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் சிறுமிகளை நள்ளிரவு உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் ஏற்றி ரத்தினபுரிக்கு அழைத்து வர முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து சிறுமிகள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று கேட்டுள்ளனர்.

அப்போது அங்கு இருந்தவர்களுக்கும் விஜயராகவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயராகவன் தனது நண்பர்களான பூபதி, குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அவர்கள் உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்து 3 சிறுமிகளை ஆட்டோவில் ஏற்றி ரத்தினபுரி புதுப்பாளையத்தில் உள்ள பூபதி வீட்டில் அடைத்து வைத்தனர்.

பிடிபட்ட விஜயராகவன், பூபதி, குமார் ஆகியோரிடம் சிறுமிகளை எதற்காக அழைத்து வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீட்கப்பட்ட 3 சிறுமிகளையும் போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். பின்னர் அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோவை வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சிறுமிகளை சிறை வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story