ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 7 கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை


ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 7 கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 5:21 PM GMT)

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 7 கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் கடைகள், ஆவின் பூத் போன்ற கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது.

ஒருபுறத்தில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டதால், பொதுமக்கள் அதில் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து சென்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சாலையோரம் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

அதன்படி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மத்திய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டு இருந்த கடைகளை காலி செய்யும் படி கூறினர். இதையடுத்து கடை நடத்தியவர்கள் உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். அதனை தொடர்ந்து கிரேன் மூலம் கடைகள் அகற்றப்பட்டு நெடுஞ்சாலைத்துறை லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

அதிகாரிகள் நடவடிக்கையால் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 7 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்காக நடைபாதையில் வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்துவதும், திரும்பவும் கடை வைப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஊட்டி ஏ.டி.சி., புளுமவுண்டன் சாலையில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும், அகற்றப்படாமல் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Next Story