பட்டுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் சாவு
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் பலியானார். காயமடைந்த மற்றொரு ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஒரத்தநாடு,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர்(வயது 28). தஞ்சாவூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(33). இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்களில் பிரபாகர் பட்டுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செந்தில்நாதன், தஞ்சையில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்த உடன் பிரபாகரும், செந்தில்நாதனும் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜாமடத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். பிரபாகர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். செந்தில்நாதன் பின்னால் அமர்ந்து இருந்தார்.
நடுவிக்காடு அருகே இவர்கள் சென்றபோது அதே சாலையில் எதிரில் வந்த லாரி திடீரென பஞ்சராகி தனது கட்டுப்பாட்டை இழந்து பிரபாகர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரபாகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பிரபாகரின் தங்கை பத்மபிரியா மற்றும் பிரபாகருடன் பணியாற்றும் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்த பிரபாகரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த ஆம்புலன்சில் பிரபாகரின் தங்கை பத்மபிரியா, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். ஆம்புலன்சை கரிக்காட்டை சேர்ந்த ராஜாமுகமது ஓட்டினார். தென்னமநாடு அருகே ஆம்புலன்ஸ் வேகமாக சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென ஒரு மாடு வந்தது. அப்போது அந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ராஜாமுகமது, ஆம்புலன்சை திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து ஏற்கனவே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருந்த பிரபாகரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரபாகரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆம்புலன்சில் இருந்த பத்மபிரியா, டிரைவர் ராஜாமுகமது, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
செந்தில்நாதன் இறந்தது குறித்து அதிராம்பட்டினம் போலீசாரும், பிரபாகர் இறந்தது குறித்து ஒரத்தநாடு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய ஆசிரியரை விடாமல் விதி துரத்தி பலி வாங்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story