தடையை மீறி பேரணி: அய்யாக்கண்ணு மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்


தடையை மீறி பேரணி: அய்யாக்கண்ணு மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:45 AM IST (Updated: 18 Sept 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி நடந்த பேரணியில் விவசாயிகளுடன் பங்கேற்ற அய்யாக்கண்ணு மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனையொட்டி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. கடன் தள்ளுபடி உள்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக டெல்லியில் பல நூதன போராட்டங்களை நடத்தியதன் மூலம் அகில இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

டெல்லியில் கடந்த 29-11-2018 அன்று விவசாய கடன் தள்ளுபடி வழங்கக்கோரி இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொண்ட விவசாயிகள் பாராளுமன்றத்தை நோக்கி தடையை மீறி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் அய்யாக்கண்ணுவும் ஏராளமான விவசாயிகளுடன் பங்கேற்றார். இந்த சம்பவம் நடந்து சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தற்போது டெல்லி ரெயில்வே போலீசார் அய்யாக்கண்ணு மற்றும் 500 விவசாயிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், மிரட்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக டெல்லி கோர்ட்டில் செப்டம்பர் 18-ந்தேதி (இன்று) ஆஜர் ஆகும்படி அவருக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டு உள்ளது.

டெல்லிக்கு புறப்பட்டார்

இதன்படி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக அய்யாக்கண்ணு நேற்று காலை திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் வக்கீல்கள் குழுவினரும் சென்று உள்ளனர். அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

இது தொடர்பாக அய்யாக்கண்ணு கூறுகையில் ‘விவசாயிகளின் உரிமைகளுக்காக நடந்த போராட்டத்தில் பழி வாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. என்னை டெல்லி திகார் சிறையில் அடைத்தாலும் கவலை இல்லை. விவசாயிகளுக்காக தாங்கி கொள்வேன்’ என்றார்.

Next Story