மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து: மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி - தெருநாய்களுக்கு உணவு வைத்த போது பரிதாபம்


மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து: மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி - தெருநாய்களுக்கு உணவு வைத்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Sept 2019 5:00 AM IST (Updated: 18 Sept 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

சிட்லபாக்கத்தில் தெருநாய்களுக்கு உணவு வைத்தபோது, மின்கம்பம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பலியானார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள முத்துலட்சுமி நகர், சாரங்க அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேதுராஜ், (வயது 42). சேதுராஜன் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சங்கரேஸ்வரி (37). இவர்களுக்கு கனகதுர்கா (14) என்ற மகளும், ஹரிஹரபாலா (9) என்ற மகனும் உள்ளனர். இவர் வழக்கமாக நாள்தோறும் இரவு தெரு நாய்களுக்கு உணவு வைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் பணிமுடிந்து வந்த சேதுராஜ் இரவு, 8.30 மணியளவில் வீட்டின் எதிரில் மதில் சுவருடன் உள்ள காலி இடத்தில் இருந்த தெரு நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் திடீரென முறிந்து கீழே விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிப்பதற்காக தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அதற்குள் மின்கம்பம் முழுவதுமாக சரிந்து சேதுராஜின் கையில் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து, சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேதுராஜ் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து சேதுராஜின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் சிட்லபாக்கம் துணை மின்சார வாரிய நிலையத்தின் முன் சேதுராஜின் உடலை வைத்து, அவரது உறவினர்கள மற்றும் நண்பர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் சேலையூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு சேதுராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

சிட்லப்பாக்கம் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story