நங்கவரம் சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு


நங்கவரம் சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sep 2019 11:15 PM GMT (Updated: 17 Sep 2019 6:51 PM GMT)

நங்கவரம் சிவன்கோவிலில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் திடீர் ஆய்வு நடத்தினார்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரத்தில் பிரசித்தி பெற்ற கோமளாம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு புலன் விசாரணை குழு தலைவர் பொன் மாணிக்கவேல் நேற்று திடீரென வந்தார். அவர் கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் முப்பாட்டனார் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டடுள்ளது. இப்பகுதியை ஆண்ட அரிஞ்சிகை மன்னரின் தந்தை இந்த கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் 21 ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளது. இதில் 19 சிலைகள் இந்த சிவன் கோவிலுக்கு சொந்தமானது. மீதி உள்ள 2 சாமி சிலைகள் பொய்யாமணியில் உள்ள அரவாண்டி அம்மன், பெருகமணியில் உள்ள நித்தியகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமானது. மேலும் 12 கற்சிலைகள் இருக்கின்றது. இந்த சிலைகளை ஒரு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

சில சிலைகள் மீது சந்தேகம்

இச்செயல் எனக்கு ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலைகளை வெளியில் எடுத்து செல்லாமல் கோவில் உள்ளேயே வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோவிலில் உள்ள 21 ஐம்பொன் சிலைகளில் ஒருசில சிலைகள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் விசாரணை நடத்தி சோதனை நடத்தப்படும். மேலும் 12 கற்சிலைகள் எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதோ அதே இடத்தில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு புலன் விசாரணை குழு தலைவர் பொன் மாணிக்கவேல் கோவில் கருவறை அருகே தென்பகுதியில் மேல்புறத்தில் ஒரு மீன் படம் உயிரோட்டமாக பொறிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிலை திருட்டு தடுப்பு பிரிவு உதவி துணை கண்காணிப்பாளர் மலைசாமி, இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story