அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 7:11 PM GMT)

அரசு அலுவலகங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 16-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றபோது, கறம்பக்குடி தாலுகா, சேவகன்பட்டியை சேர்ந்த பெரியதம்பி என்பவர் பட்டா மாற்றம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பொது மக்களின் மனுக்கள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தந்த துறை அலுவலர்கள் மூலம் மனுவின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் அளிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

மேலும் அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என பல்வேறு நிலைகளில் பொது மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான கலெக்டர் அலுவலக வளாகத்தில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவது, அருகில் உள்ளவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், பொதுமக்களுக்கு உயிர் பயத்தையும், மனதில் பீதியையும் ஏற்பட வழிவகை செய்கிறது.

எனவே கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், தங்கள் தனி பிரச்சினைக்காக தற்கொலை முயற்சி மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மனுதாரர்கள் அளிக்கும் நியாயமான மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story