தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்: பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த மக்கள் - கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்


தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்: பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த மக்கள் - கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, அவரை திருப்பி அனுப்பினர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

நாடாளுமன்றத்திற்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சித்ரதுர்கா தனி தொகுதியில் பா.ஜனதா சார்பில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏ.நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது தொகுதிக்கு உட்பட்ட துமகூரு மாவட்டத்தில் உள்ள பெம்மனஹள்ளி கிராமத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்றார். அங்கு கொல்லா சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியான கொல்லரஹட்டிக்கு மக்களின் குறைகளை கேட்க ஏ.நாராயணசாமி எம்.பி. வந்தார்.

அப்போது, அந்தப்பகுதி மக்கள், எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். நீங்கள் தலித் என்பதால், எங்கள் கிராமத்தில் நுழையக்கூடாது, நீங்கள் உள்ளே வருவது எங்களின் பாரம்பரிய மரபுக்கு எதிரானது. கடந்த காலத்திலும் இதுபோல் வந்த மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் திருப்பி அனுப்பி இருக்கிறோம் என்று கூறி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மக்களின் நலனுக்காக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவே தான் இங்கு வந்துள்ளதாக ஏ.நாராயணசாமி எம்.பி. எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை கிராம மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து ஏ.நாராயணசாமி எம்.பி. அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். அந்த மக்களிடம் ஏ.நாராயணசாமி பேசும் வீடியோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.க்கு நேர்ந்த இந்த நிகழ்வு குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், “உள்ளூர் தாசில்தார், சமூக நலத்துறை அதிகாரி, போலீசார் ஆகியோர் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளோம்“ என்றார்.

தனக்கு நடந்த தீண்டாமை கொடுமை குறித்து ஏ.நாராயணசாமி எம்.பி. நிருபர் களிடம் கூறுகையில், “இதுபோன்ற முறைகள் இன்றும் கூட தொடர்ந்து நடப்பது எனக்கு மனவேதனை அளிக்கிறது. என்னை கிராமத்திற்குள் அனுமதிக்க மறுத்த மக்களிடம், வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இங்கு வந்துள்ளேன். அரசியல் நோக்கத்திற்காக நான் வரவில்லை என்று எடுத்துக் கூறினேன். அதில் சிலர் என்னை உள்ளே வர அனுமதித்தனர். ஆனால் அந்த சமுதாயத்திற்குள் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் நான் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன். ஆனால் வருகிற நாட்களில் அந்த சமுதாய மக்களிடையே உள்ள மூடநம்பிக்கையை அகற்ற பாடுபடுவேன். அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்“ என்றார்.

இதுகுறித்து துமகூரு மாவட்ட கலெக்டர் கே.ராகேஷ்குமார் கூறும்போது, “அந்த கிராமத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த சமுதாய மக்களிடையே இதுபற்றி பேசுவோம். தேவைப்பட்டால் அந்த கிராமத்திற்கு நான் செல்வேன். அந்த மக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை அறிக்கை பெறுவேன். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பதை அறிந்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்“ என்றார்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் கூறுகையில், “அந்த சமுதாய மக்களின் மரபுப்படி அவர்கள் வசிக்கும் கொல்லரஹட்டிக்குள் தலித் சமுதாயத்தினர் உள்ளே செல்ல முடியாது. இந்த மரபு மீறப்பட்டால், ஏதாவது மோசமான சம்பவம் நடைபெறும். இதற்கு முன் உதாரணங்களும் இருக்கிறது“ என்றனர்.

அதைத்தொடர்ந்து இதுபற்றி கருத்து தெரிவித்த இன்னொரு கிராமத்தை சேர்ந்த ஒருவர், “நல்ல காரணத்திற்காக எம்.பி. இங்கு வந்தார். ஆனால் அந்த சமுதாய மக்கள் சில மரபுகளை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறார்கள். இந்த நிகழ்வால் எம்.பி. வேதனை அடைந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்“ என்றார்.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது தொழில்துறை மந்திரியாக உள்ள ஜெகதீஷ் ஷெட்டர் கண்டனம் தெரிவித்துள்ளார். நவீன யுகத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு எம்.பி.க்கு நேர்ந்த இந்த தீண்டாமை கொடுமை கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story