ஜோலார்பேட்டை அருகே, பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவ-மாணவிகள் போராட்டம்
ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம், மண்டலவாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தமிழ், ஆங்கில வழியில் 156 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 2 ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். மேலும் 2 ஆசிரியர்கள் அயல்பணிக்கு சென்றுள்ளனர். தற்போது தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் மாணவ -மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் பள்ளி நுழைவாயில் கேட்டை மூடி பூட்டு போட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அயல்பணிக்கு சென்ற ஆசிரியர்கள் மீண்டும் வரக்கோரியும், புதிதாக கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கு வந்த தலைமையாசிரியர் சகாயமேரி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானம் செய்தார். மேலும் மேல் அதிகாரிகளிடம் கூறி, பள்ளிக்கு விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்வதாக உறுதியளித்தார். அதன்பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ -மாணவிகளும் வகுப்பிற்கு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story