பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு


பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் - அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2019 9:45 PM GMT (Updated: 17 Sep 2019 8:13 PM GMT)

“பா.ஜனதா கூட்டணியில் இருந்தாலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்“ என்று நெல்லையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி கூறினார்.

நெல்லை,

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தச்சநல்லூர் சாவடி திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அந்த மக்களுக்காகவும், அவர்களுடைய வாழ்வு சிறக்கவும் போராடியவர்கள்தான் தந்தை பெரியார், அண்ணா. ராஜாஜி, முதல்-அமைச்சராக இருந்தபோது இந்தியை கட்டாயப்படுத்தினார். இதை எதிர்த்து அண்ணா போராட்டம் நடத்தினார். அதன்பிறகு அதை அவர் வாபஸ் வாங்கினார்.

இதன்பிறகு குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். அப்போதும் அண்ணா மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். இதனால் ராஜாஜியின் முதல்-அமைச்சர் பதவியே பறிபோனது. காமராஜர் முதல்-அமைச்சரானார். அவர் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தார்.

1965-ம் ஆண்டு மீண்டும் இந்தி ஆட்சி மொழியாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவின் தலைவர் அமித்ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியா ஒரே நாடு, இந்தியா முழுவதும் ஒரே மொழியாக இந்தி மொழிதான் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கூறி உள்ளார். அவருக்கு நான் இந்த மேடையின் வாயிலாக ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன்.

நாங்கள் பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். பாரதீய ஜனதா ஆட்சி கொண்டு வருகின்ற நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்தியை திணித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதே நேரத்தில் இந்தியை திணித்த காங்கிரஸ் எப்படி காணாமல் போனதோ? அதே கதி தான் பாரதீய ஜனதாவுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு மாநிலத்தின் மொழி, கலாசாரம், உரிமை, உணர்வு ஆகியவற்றில் கை வைக்காதீர்கள். அது ஆபத்தில் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலாசத்யானந்த், இன்பதுரை எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, இளைஞர் அணி செயலாளர் அரிகரசிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், பகுதி செயலாளர் ஜெனி, முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க.வினர் பகுதி செயலாளர் நெல்லை சுப்பையா தலைமையில் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story