நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? ஐ.பெரியசாமி பேட்டி
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
நெல்லை,
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளோம். இடைத்தேர்தல்களில் தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும். இதற்கான பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்ற ஆவலில் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி கிடைக்க மு.க.ஸ்டாலின் மீது தான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான்.
நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். இது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இங்கு காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தியது, தங்களது தொண்டர்களை தயார் படுத்துவதற்குத்தான். அதேபோல் தற்போது தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது தெரியவரும். இது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
நாங்குநேரியில் மக்களை சந்திக்க அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் இனிமேல் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு ஆகியோர் பேசினர்.
இதில் இளைஞர் அணி துணை செயலாளர் துரை, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நிர்வாகி கிரகாம் பெல் மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story