தேனி அருகே பாதை வசதி கேட்டு புளியந்தோப்பில் 2-வது நாளாக குடியேறும் போராட்டம்


தேனி அருகே பாதை வசதி கேட்டு புளியந்தோப்பில் 2-வது நாளாக குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் புளியந்தோப்பில் 2-வது நாளாக குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து பெரியகுளம் சாலைக்கு செல்வதற்கு தனியார் நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளர் கோர்ட்டு உத்தரவு பெற்று, தனது நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இந்திரா காலனி மக்கள் தங்களுக்கு மாற்று பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறி ரத்தினம் நகரில் உள்ள ஒரு புளியந்தோப்பில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் குடியேறினர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அவர்களில் சிலர் மட்டும் இரவில் அங்கேயே தங்கினர். மற்றவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். நேற்று 2-வது நாளாக அனைவரும் புளியந்தோப்புக்கு வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். அங்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் நேற்று பகலில் வந்தார். அவர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று பாதை உள்ளதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பொதுமக்கள் தரப்பில், மாற்றுபாதை சுற்றுப் பாதையாகவும், இருதரப்பினர் மோதல் ஏற்படும் சூழலிலும் உள்ளதாகவும், தங்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ.-அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து மக்கள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story