ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி ஆடம்பர திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை


ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி ஆடம்பர திருமணம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 9:13 PM GMT)

ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி ஆடம்பர திருமணம் நடத்தப்பட்டது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மணமக்களின் பெற்றோரிடம் 23-ந்தேதி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம், 

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள ராஜசபை தனி சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் மூலவர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் தான் எழுந்தருள்வார். அங்கு மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், லட்சார்ச்சனை போன்றவை நடைபெற்று திருஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிப்பார். எனவே நடராஜரின் ராஜசபை புனிதமான இடம் என்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் ஆயிரங்கால் மண்டபத்தில் எந்த காலத்திலும் நடத்தப்பட்டது இல்லை.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சிவகாசியை சேர்ந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகளுக்கும், சென்னை பிரபல பாத்திர கடை அதிபரின் மகனுக்கும் திருமணம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. திருமணத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபமே நட்சத்திர ஓட்டல் போன்று மின்னொளி மற்றும் வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலின் மரபை மீறி ஆடம்பரமாக திருமணம் நடந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத் கணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தப்பட்ட திருமணத்தால் சிதம்பரம் நடராஜர் கோவில் மரபு மீறப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை முன்னுதாரணமாக வைத்து கோவிலுக்குள் பல கலாசார சீர்கேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த செயலை செய்த தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிண்டு அலுவலகத்திற்கு தீட்சிதர்கள் பாஸ்கர், பட்டு, நவமநீ மற்றும் சிலர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது தீட்சிதர்கள், நடராஜர் கோவில் வரலாற்றில் மிகப்பெரிய தவறு நடந்து உள்ளது. அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வரும் காலங்களில் இது போன்ற தவறு நடக்காது என்று கூறினர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிண்டு கார்த்திகேயன் கூறுகையில், முதற்கட்டமாக தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக கோவிலில் திருமணம் நடத்திய மணமக்களின் பெற்றோரிடம் வருகிற 23-ந் தேதி விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

Next Story