மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை: ஆரேகாலனிக்கு பதிலாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்


மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை: ஆரேகாலனிக்கு பதிலாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 18 Sept 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை ஆரேகாலனிக்கு பதிலாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

மும்பையில் செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் பணிமனை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சம் ஆரேகாலனி பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு 2,700 மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆரேகாலனியில் மரங்களை வெட்டுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மும்பை வந்த அவர் ஆரேகாலனி பகுதியை பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பது மரங்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. பல்லுயிர் சூழலுக்கு ஏற்பட்ட பிரச்சினையும் கூட. எனவே ஆரேகாலனி பாதுகாக்கப் பட வேண்டும். ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மற்ற திட்டங்களுக்கும் இங்கு கதவு திறந்து விடப்பட்டு விடும். ஆரேகாலனியில் பணிமனை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பேச்சோடு நிறுத்தி விடாமல் செயலிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story