நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 2,773 கன அடி நீர்வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.22 அடியாக இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரத்து 637 கன அடிநீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.17 அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 400 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் திறந்துவிடப்பட்டது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Next Story