முன்விரோதத்தில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - பிளஸ்-1 மாணவன் உள்பட 4 பேர் கைது


முன்விரோதத்தில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - பிளஸ்-1 மாணவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் முன்விரோதத்தில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக பிளஸ்-1 மாணவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் மஞ்சுநாதன் (வயது 24). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரும், கிருஷ்ணகிரி மேல் சோமார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கெம்பன் மகன் கார்த்திக் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

கார்த்திக்கிற்கும், குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டைச் சேர்ந்த அகில் என்கிற அகிலன் (23), குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளியைச் சேர்ந்த அகர் நிவாஸ் (22), கிருஷ்ணகிரி ராசுவீதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அந்த நேரம் மஞ்சுநாதன் தனது நண்பர் கார்த்திக்கிற்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது கிராசை சேர்ந்த மஞ்சுநாதன் வீடு மீதும், மேல்சோமார்பேட்டையில் உள்ள கார்த்திக்கின் வீடு மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காலி பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீயை பொருத்தி மஞ்சுநாதன் மற்றும் கார்த்திக் ஆகியோரின் வீடுகள் மீது மர்ம நபர்கள் வீசியது தெரியவந்தது. இது தொடர்பாக மஞ்சுநாதன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதேபோல கார்த்திக்கின் தந்தை கெம்பன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் (கிருஷ்ணகிரி டவுன்), சுரேஷ்குமார் (தாலுகா) ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அகில் என்கிற அகிலன், அகர்நிவாஸ், ஜெகதீஸ்வரன் மற்றும் கிருஷ்ணகிரி மேல் சோமார்பேட்டையைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

Next Story