5 மாவட்டங்களை சேர்ந்த 343 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் வழங்கினர்


5 மாவட்டங்களை சேர்ந்த 343 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் வழங்கினர்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 9:46 PM GMT)

5 மாவட்டங்களை சேர்ந்த 343 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

தர்மபுரி,

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா தர்மபுரி காந்திநகர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்று பேசினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு 5 மாவட்டங்களை சேர்ந்த 343 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில்தான் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதை 2 ஆண்டுகளாக உயர்த்தி வழங்க உரிய ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் 66.72 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த கல்வி வழங்க அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க போட்டி போட்டுகொண்டு செயல்பட்டு வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து துணை முதல்-அமைச்சரிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு மாணவர்களின் நலன்கருதி 14 வகையான பொருட்கள் வழங்கி வருகிறது. இதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உயர்கல்வித்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 584 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.8 சதவீதம் பேர். தமிழகத்தில் இது 48.6 சதவீதமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 98.41 சதவீதம் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில்கிறார்கள், என்று கூறினார்.

இந்த விழாவில் முதன்மை கல்வி அலுவலர்கள் கணேஷ்மூர்த்தி, மகேஸ்வரி, தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சிவப்பிரகாசம், பொன்னுவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடைரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.குப்புசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சுமதி உள்பட அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story