மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்களுக்கு சிறை தண்டனை - கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விளம்பர பலகை, பேனர்கள் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விளம்பர பலகை மற்றும் பேனர்கள் விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பிரிண்டிங் உரிமையாளர்கள், நகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகளை திசை திருப்பக்கூடிய வகையிலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பிரதான சாலைகளின் இருபுறங்கள், நடைபாதைகள், சாலைகளின் மத்தியில், பெரிய சாலைகள் ஆகியவற்றில் எந்தவொரு விளம்பர பலகையோ, பேனர்களோ வைக்கக்கூடாது. இதேபோல், கல்வி நிறுவனங்கள், மதவழிப்பாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலைகளின் முனைகள், 100 மீட்டர் அளவுக்குள் உள்ள சாலை சந்திப்புகள், அங்கீகரிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் நிறுவக்கூடாது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (விளம்பர பலகைகள், பதாகைகள் நிறுவ அனுமதி) சட்டம் 2011-ன்படி விளம்பர பலகைகள் அமைக்க 15 நாட்களுக்கு முன்பாகவே படிவம் 1-ல் மாவட்ட கலெக்டர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் வைப்புத்தொகை ஆகியவற்றை செலுத்த வேண்டும். மேலும் நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட துறையின் உதவி செயற்பொறியாளர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் பெறப்பட்ட தடையின்மை சான்று, நகராட்சிக்கு சொந்தமான இடமாக இருப்பின் நகராட்சி ஆணையரின் தடையின்மைச் சான்று மற்றும் தொடர்புடைய காவல் நிலைய அலுவலரின் தடையின்மைச் சான்று ஆகியவற்றுடன் விளம்பர பலகை, பேனர்கள் வைக்கப்படும் இடங்களை குறிப்பிட்டு காட்டும் வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மேலும், அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரம், பேனர்களின் அடிப்பகுதியில் அனுமதிபெற்றவரின் விவரம், அனுமதி வழங்கப்பட்ட ஆணை எண் மற்றும் செல்லுபடியாகும் கால அளவு, மொத்த விளம்பர பலகைகள், பேனர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதன்படி, தற்காலிக விளம்பர பலகைகள் வைக்கப்பட்ட நாளிலிருந்து 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதிக்காலம் முடிவடைந்த பிறகு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு அகற்ற வேண்டும். மேலும் 2 விளம்பர பலகைகளுக்கு இடையே 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அனுமதியின்றி விளம்பர பலகை, பேனர்கள் வைக்கப்படுவதைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகை, பேனர்கள் ஆகியவற்றை அகற்றப்பட்டு, அதற்கான செலவீன தொகை முழுவதும் உரிய நபரிடம் வசூல் செய்யப்படும். மேலும், விதிமுறைகளை மீறி விளம்பர பலகை, பேனர்கள் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story