சேலம் மாநகரில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்காவிட்டால் அபராதம் - ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை
சேலம் மாநகரில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்காவிட்டால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்,
பருவமழை காலத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநகர பகுதிகளில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் பரப்புரையாளர்கள், கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் உரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களை சில குடியிருப்புகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று புகார் வந்துள்ளது.
எனவே உரிய அடையாள அட்டையுடன் வரும் பணியாளர்களை தங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காத சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், நீர்வழித்தடங்களை உரிய காலத்திற்குள் தூர்வாரிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
Related Tags :
Next Story