‘நான் எந்த கட்சியிலும் சேரவில்லை’ நடிகை ஊர்மிளா விளக்கம்


‘நான் எந்த கட்சியிலும் சேரவில்லை’ நடிகை ஊர்மிளா விளக்கம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

‘நான் எந்த கட்சியிலும் சேரவில்லை’ என நடிகை ஊர்மிளா மடோங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.

மும்பை,

இந்தியில் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ்பெற்றவர் பிரபல நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய சமயத்தில் இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வடமும்பை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஊர்மிளா மடோங்கரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி சுமார் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு தனக்காக தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது புகார் கடிதம் ஒன்றை மாநில தலைமைக்கு எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஊர்மிளா மடோங்கர் கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகினார்.

இந்தநிலையில் அவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான மிலிந்த் நர்வேக்கருடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் சிவசேனாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை நடிகை ஊர்மிளா மடோங்கர் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. எனவே இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம். எனக்கு எதிராக இதுபோன்ற தகவல்களை கூறுவது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story