நானார் திட்டத்தின் கதி தான்: ஆரேகாலனி பணிமனைக்கு ஏற்படும் உத்தவ் தாக்கரே சொல்கிறார்


நானார் திட்டத்தின் கதி தான்: ஆரேகாலனி பணிமனைக்கு ஏற்படும் உத்தவ் தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 18 Sept 2019 3:26 AM IST (Updated: 18 Sept 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் கதி தான் ஆரே காலனி மெட்ரோ ரெயில் பணிமனைக்கும் ஏற்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பை,

மும்பை ஆரேகாலனியில் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிமனை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஆரேகாலனியில் சுமார் 2 ஆயிரத்து 700 மரங்கள் வெட்டப்பட உள்ளன.

இந்தநிலையில் மெட்ரோ ரெயில் பணிமனைக்காக மரங்களை வெட்ட சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் அங்கு பணிமனை அமைக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியின்போது நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ‘நானார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏற்பட்ட அதே கதி தான் ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் திட்டத்திற்கு எற்படும்’ என தெரிவித்தார்.

ஏற்கனவே ரத்னகிரி மாவட்டம் நானார் பகுதியில் ரூ.3 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டது. இது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சிவசேனா கட்சியின் அழுத்தம் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இதேபோன்ற நிலை மெட்ரோ ரெயில் பணிமனைக்கும் ஏற்படும் என உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதை இந்த நிகழ்வு காட்டுவதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story