டி.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகை


டி.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Sept 2019 4:36 AM IST (Updated: 18 Sept 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி பகுதியில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு முழுமையான கூலி வழங்க வேண்டும். வறட்சி காலத்தில் 200 நாள் வேலை வழங்க வேண்டும். குடி மராமத்து பணிகளை 100 நாள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்க வேண்டும். கிராமத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் 300 பேர்களில் தினசரி 10,15 நபர்களுக்கு மட்டும்தான் வேலை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் அட்டை வைத்திருப்போருக்கு வெறும் 13 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிவேலாம்பட்டி, பி.சுப்புலாபுரம், முத்தப்பன்பட்டி, கெஞ்சம்பட்டி, குன்னத்தூர் ஆகிய கிராமங்களை சார்ந்த பெண்களும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினரும், வன்னிவேலாம்பட்டி விலக்கு பகுதியில் ஒன்று திரண்டு ஊர்வலமாக டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் உமா மகேஸ்வரன், பாண்டியன், முருகன், அழகுராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சமையன் மற்றும் கிராம பெண்கள் குழுவினரை ஒன்றிய ஆணையாளர்கள் கலைச்செல்வன்,சவுந்திரராஜன் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையில் தொடர்ந்து அனைவருக்கும் பணிகள் வழங்கப்படும், சட்டப்படி கூலி வழங்கப்படும் என்று பேசப்பட்டது.பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றதால் ஒன்றிய அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story